பள்ளி மாணவன் மீது தாக்குதல் - வட்டாரக் கல்வி அதிகாரி உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு.!!
case file to six peoples for attach student
கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா யாகவகேட் கிராமத்தை சேர்ந்தவர்கள் நடராஜ் - அஞ்சலி தம்பதியினர். இவர்களது மகன் யஷ்வந்த் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், யஷ்வந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்றபோது அங்கு ஆசிரியை சரஸ்வதம்மா யஷ்வந்தை குச்சியால் தாக்கியுள்ளார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக குச்சி யஷ்வந்த் கண்ணில் பட்டதால் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து மாணவன் பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் யஷ்வந்தை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் பெற்றோர் யஷ்வந்துடன் பள்ளிக்குச் சென்றனர்.

அங்கு சம்பவம் குறித்து ஆசிரியையிடம் கேட்டபோது அவர் எந்தவித பதிலும் கூறவில்லை. இதனால் கோபமடைந்த பெற்றோர் அஞ்சலியுடன் பட்லஹள்ளி காவல் நிலையத்தில் மகனை தாக்கிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். ஆனால் போலீசார் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து வட்டார கல்வித்துறை அதிகாரியிடம் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது. அவரும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கடும் அதிருப்தி அடைந்த பெற்றோர் தனது மகனுடன் அரசு ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த முன்னாள் எம்.எல்.ஏ கிருஷ்ணய்யா ரெட்டி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போலீசாருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிலையில், மாணவனை தாக்கியதாக சரஸ்வதம்மா மற்றும் அரசு ஆசிரியர் சங்க தலைவர் அசோக், ஆசிரியர்கள் நாராயணசாமி, ஸ்ரீராமரெட்டி, வெங்கடராமன ரெட்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத வட்டார கல்வி துறை அதிகாரி உமாதேவி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
English Summary
case file to six peoples for attach student