குடிகாரர்கள் கூடாரமான பேருந்து நிலையத்திற்கு ரூ.85 லட்சத்தில் பராமரிப்பு பணி.!! பேருந்து வராமல் 21 ஆண்டுகளாக குமுறும் பொதுமக்கள்.!!
Rs85 lakhs maintenance work at bus stand where bus does not come
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவில் கடந்த 2002 ஆம் ஆண்டு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு 21 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு பகுதியில் இருந்துதான் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோயில் மற்றும் பெரியார் அணைக்கு செல்ல முடியும்.
வத்திராயிருப்பு பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்துகள் வராததால் தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது. அதேபோன்று இந்த பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள முத்தாலம்மன் பஜார் பகுதியில் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்படுவதால் பொதுமக்களுக்கு இடையூறாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
வத்திராயிருப்பு பேருந்து நிலையம் அருகே அரசு தலைமை மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகம், கால்நடை மருந்தகம் என முக்கியமான அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வராததால் முத்தாலம்மன் பஜார் பகுதியில் இறங்கி பொதுமக்கள் தனியார் வாகனங்கள் மூலம் அரசு அலுவலகங்களுக்கும், மருத்துவமனைக்கும் வருகின்றனர்.
வத்திராயிருப்பு பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வராததால் தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் மது அருந்துபவர்களின் கூடாரமாகவும் மாறியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
செயல்படாமல் உள்ள வத்திராயிருப்பு பேருந்து நிலையத்தை 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. பேருந்துகளே வராத பேருந்து நிலையத்திற்கு பராமரிப்பு பணி என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு முத்தாலம்மன் பஜார் பகுதியில் பேருந்தில் நிறுத்துவதற்கு அனுமதிக்காமல் வத்திராயிருப்பு பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Rs85 lakhs maintenance work at bus stand where bus does not come