பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது!
Salem Periyar University Vice Chancellor Arrested
தமிழக அரசையும், உயர்கல்வித்துறையையும் புறந்தள்ளிவிட்டு, தன்னிச்சையாக செயல்பட்ட சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கல்வி வழங்குவதற்காக தனி நிறுவனம் ஒன்றைத் தொடங்கியதற்காக தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் போன்ற மிகவும் பின்தங்கிய பகுதி மக்களுக்கு உயர்கல்வி வழங்குவதற்காக சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் சிலருடன் இணைத்துக்கொண்டு, பூட்டர் அறக்கட்டளை (Periyar University Technology entrepreneurship and Research Foundation) என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கி இருந்தார்.
மேலும், அப்டெக்கான் ஃபோரம் என்ற இன்னொரு அமைப்பை உருவாக்கி, பல்கலைக்கழகத்தை விட அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களாக இதனை தொடங்கியுள்ளனர்.
பெரியார் பல்கலைக்கழக சட்டப்பிரிவு 19இன்படி, பொது ஊழியர்களாக கருதப்படுவார்கள். அவர்கள் புதிதாக எந்தத் தொழிலையும் தொடங்க முடியாது; தனியார் நிறுவனம் தொடங்குவதாக இருந்தாலோ அல்லது அதில் முதலீடு செய்ய வேண்டும் என்றாலோ அதற்கு பல்கலைக்கழக அனுமதியும், தமிழக அரசின் அனுமதியும் பெற வேண்டும்.
இதுகுறித்து கடந்த நவம்பர் மாதமே பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்திருந்த அறிக்கையில், "பெரியார் பல்கலைக்கழகத்தின் அதன் துணைவேந்தரும், அவரது கூட்டாளிகளும் தனி நிறுவனம் தொடங்கியிருப்பது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும். விசாரணை செம்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அனைவரையும் பணி நீக்க வேண்டும். கடந்தகாலத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்த வழக்கு விசாரணைகளை விரைவு படுத்தி, தவறு செய்த அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத் தா வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
English Summary
Salem Periyar University Vice Chancellor Arrested