தண்ணீரில் தத்தளித்த சேலம் மாணவர்கள்...ஒருவர் உயிருடன் மீட்பு..மற்றொருவரின் கதி என்ன?
Salem students drowned in water
இந்திய மாணவர் சங்கத்தின் 26-வது மாநில மாநாடு திருவாரூரில் இன்று தொடங்கி வருகிற 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சேலத்தில் இருந்து இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் ஜலகண்டபுரத்தை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 18), தாமரைச்செல்வன் (18) உள்பட அறுபது பேர் ஒரு பஸ்சில் புறப்பட்டனர்.
சேலத்திலிருந்து புறப்பட்ட அவர்கள் தஞ்சை பெரிய கோவிலை சுற்றி பார்த்துவிட்டு மாநாட்டுக்கு செல்வதாக முடிவு செய்தனர். அதன்படி அந்த பஸ் இன்று காலை தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்தது. பின்னர் அவர்கள் குளித்துவிட்டு பெரிய கோயிலை சுற்றி பார்த்து அதன் பிறகு திருவாரூர் மாநாட்டுக்கு செல்ல முடிவு செய்தனர்.
இதையடுத்து தினேஷ்குமார், தாமரைச்செல்வன் ஆகிய இரண்டு பேரும் பெரிய கோவில் முன்பு உள்ள படித்துறையில் இறங்கி கல்லணை கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் அருகேயுள்ள குளியல் அறையில் குளித்தனர். அப்போது தினேஷ்குமார், தாமரைசெல்வன் இருவரும் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த போது திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் ஆற்றில் சுழல் ஏற்பட்டு அதில் இரண்டு பேரும் சிக்கி தத்தளித்த நிலையில், காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அபாய குரல் எழுப்பினர் .
அந்த வழியாக சென்றவர்கள் இதைப் பார்த்து, உடனடியாக தஞ்சை தீயணைப்பு துறை மற்றும் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறை சிறப்பு அலுவலர் பொய்யாமொழி மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதற்கிடையே தினேஷ்குமார் ஆற்றின் கரையில் இருந்த ஒரு மரக்கிளையை பிடித்தவாறு இருந்தார். அங்கு பாதுகாப்பு உபகரணங்களுடன் சென்ற தீயணைப்பு துறையினர் தினேஷ் குமாரை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
தினேஷ் குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் தண்ணீரில் மூழ்கி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தாமரைச்செல்வனின் கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தாமரைச்செல்வனை தேடி வரும் நிலையில், இது குறித்து மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Salem students drowned in water