தமிழக பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க அம்சங்கள்! சரத்குமார் கருத்து.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும் கடன் தொகை அதிகரிப்பது வேதனைக்குரியது என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் பட்ஜெட் தொடர்பாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காகிதமில்லா பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்த நிதியமைச்சர் திரு.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்தும், சில திட்டங்களில் மாற்றம் செய்தும், புதிய சீர்திருத்த திட்டங்களையும் அறிவித்து  உள்ளார்கள்.   

`தமிழக ஒலிம்பிக் பதக்க தேடல் திட்டம்', `வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்' திட்டம், கொற்கையில் ஆழ்கடல் ஆய்வு, மதுரை, திருவள்ளூர், கோவை, பெரம்பலூர், வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் புதிய தொழில்பூங்காங்கள் அமைக்கும் திட்டம், வானிலையை துல்லியமாக கண்டறிய சூப்பர் கம்ப்யூட்டர், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (iTNT) அமைப்பு, விழுப்புரம், இராமநாதபுரம் மாவட்டங்களில்  புதிய அரசு அருங்காட்சியகங்கள்,  சமூகவலைதளங்கள் வாயிலாக நடைபெறும் பொய் பிரச்சாரங்கள், குற்றங்களை தடுக்க காவல்துறையில் சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும் என்பவை உட்பட தமிழக அரசால் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகளும், திட்டங்களும் வரவேற்கத்தக்கது. 

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றியமைக்கப்பட்டு, அரசுப் பள்ளிகளில் 6 – 12 வரை படித்து உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்ற  அறிவிப்பும், ஐ.ஐ.டி.யில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விச்செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு பாராட்டுக்குரியது.

அரசுப்பள்ளி மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை குறைவாக இருப்பதால் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, தாலிக்கு தங்கம் திட்டத்தால் பயன்பெற்று வரும் மகளிருக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவாறு அமைய வேண்டும். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுத்தப்படும் திட்டமும், திருமண நிதியுதவியும் தடையின்றி வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.   மேலும், மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவதற்கான அறிவிப்பு இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே வெளியிடாதது மக்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கும்.  

நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வரும் தமிழகத்திற்கு 14 - வது நிதிக்குழுவால் வழங்கப்பட்ட மானியங்களைக் காட்டிலும் குறைந்த அளவிலேயே 15 – வது நிதிக்குழு மானியம் அதிகரித்துள்ளது. ஒன்றிய அரசு, பாரபட்சமின்றி மாநில அரசுடன் ஒத்துழைப்பு நல்கி செயல்பட்டால், தேச வளர்ச்சியும், மாநில வளர்ச்சியும் சிறப்பாக அமையும்.

வரவேற்கத்தக்க அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தாலும், அரசு மேலும் ₹90,116 கோடி அளவுக்கு நிகரக் கடன் பெற திட்டமிட்டு, 2023 இல் நிலுவைக் கடன் ₹6.53 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கும் என்பது வேதனைக்குரியது.  

தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் வாயிலாக கடன் தொகையை குறைத்து, சாதாரண பட்ஜெட் அறிவிப்புகள் என்பதோடு நின்றுவிடாமல் பொருளாதார வளர்ச்சியை மென்மேலும் ஊக்குவித்து செயல்பட்டால்   பாராட்டலாம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sarathkumar statement on TN Budget


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->