ராமேஸ்வரத்தில் மீனவ பெண் பாலியல் வன்கொடுமை.! குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சீமான் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


இராமேசுவரத்தில் மீனவப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வடமாநில கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

இராமேசுவரம் அருகே உள்ள வடகாடு மீனவ கிராமத்தில் கடற்பாசி எடுக்கச் சென்ற மீனவப்பெண் தங்கை சந்திராவை, அங்கு இறால் பண்ணையில் வேலை பார்த்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த கயவர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி கடும் அதிர்ச்சியையும், பெரும் ஆத்திரத்தையும் அளிக்கிறது.

ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஓராண்டு காலத்தில் தமிழ்நாட்டில் வட மாநிலத்தவரால் தொடர்ந்து அதிகரித்து வரும் கொடுங்குற்றங்களையும், சட்டம் ஒழுங்கு சீரழிவினையும் தடுக்கத் தவறிய திமுக அரசின் செயலற்றத்தன்மை வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டின் மாநகரங்கள் மட்டுமின்றி, இரண்டாம்நிலை நகரங்கள், குக்கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் நாளுக்குநாள் வடமாநிலத்தவர் ஆதிக்கம் இலட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழர்களின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவை பறிபோவதோடு கொலை, கொள்ளை உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் அதிகமாகி மக்கள் பொதுவெளியில் நடமுடியாத அளவிற்குச் சட்டம் ஒழுங்கும் சீர்கெட்டு வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் வடமாநிலத்தவர்கள் தமிழகக் காவல்துறையினரைத் தாக்கியதில் காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் அளவுக்கு தமிழ்நாட்டின் நிலைமை மிகமோசமாகியுள்ளது.

அந்நிகழ்வினை வன்மையாகக் கண்டித்த நாம் தமிழர் கட்சி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை முன்னெடுத்ததோடு, தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் அனைத்து வடமாநிலத்தவருக்கும் உள்நுழைவுச் சீட்டினை உடனடியாக நடைமுறைப்படுத்தவும் கோரியது.

ஆனால், காவல்துறையினர் மீதான தாக்குதலுக்குப் பிறகும் விழித்துக்கொள்ளாத தமிழ்நாடு அரசு, நாம் தமிழர் கட்சியின் கண்டனத்தையும், கோரிக்கையையும் அலட்சியம் செய்ததன் விளைவே, தற்போது வடமாநிலத்தவர் அப்பாவி மீனவப்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக எரித்துக் கொள்ளும் அளவிற்குச் சட்டம் ஒழுங்கு சீரழிய முக்கியக் காரணமாகும்.

எனவே, காவல்துறையை தன்வசம் வைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர், முற்றுமுழுதாகச் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கினை சீரமைக்க இதன் பிறகாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், வடமாநிலத்தவருக்கு உள்நுழைவுச் சீட்டு முறையினை உடனடியாக நடைமுறைப்படுத்தி, இதுபோன்ற கொடூரங்கள் இனியும் தொடராதவாறு தடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், மீனவப்பெண் சந்திராவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த கொடூரர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி, விரைந்து மிகக்கடுமையான தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட மீனவப் பெண்ணின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் துயர்துடைப்பு உதவி வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman statement on Fisherwoman sexual abuse


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->