உயர் ரக போதைப்பொருள் விற்பனை - கோவையில் 7 பேர் கைது.!
seven peoples arrested for high quality drugs seized in coimbatore
தமிழகத்தில் அதிலும் குறிப்பாக கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா, போதைப்பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு, கஞ்சா, போதைப்பொருள் விற்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாநகர போலீசாருக்கு கோவை மாநகர பகுதிகளில் உயர் ரக போதைப்பொருட்கள் விற்பனை செய்ய கும்பல் ஒன்று இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் படி போலீசார் ஆர்.எஸ்.புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, மேட்டுப்பாளையம் சாலை பூமார்க்கெட், அம்மா உணவகம் கேட் அருகே சந்தேகத்திற்கிடமாக 7 பேர் நின்றிருந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களின் அருகில் சென்றனர். இதை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயன்றனர்.
உடனடியாக போலீசார் சுற்றி வளைத்து 7 பேர் கும்பலையும் பிடித்து சோதனை செய்தனர்.
அதில், எம்.டி.எம்.ஏ. பவுடர், கொகைன், கிரீன் கஞ்சா, உலர்ந்த கஞ்சா உள்ளிட்ட உயர்ரக போதைப் பொருள் இருந்தது. இது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 7 பேரையும் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

கைதானவர்களிடம் இருந்து போலீசார் 24.40 கிராம் எம்.டி.எம்.ஏ. என்ற உயர் ரக போதைப்பொருள், 12.47 கிராம் எம்.டி.எம்.ஏ. பவுடர், 92.43 கிராம் கொகைன், 1.620 கிலோ கிரீன் கஞ்சா, 1 கிலோ 16 கிராம் உலர்ந்த கஞ்சா மற்றும் ரூ.25 லட்சம் ரொக்கப்பணம், பணம் எண்ணும் எந்திரம், போதை பொருள் எடை பார்க்கும் எந்திரம், பீர் பாட்டில்கள், 3 கார்கள், 12 செல்போன்கள் என ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள், நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த ரிதேஷ் லம்பா மூலமாக மகராஷ்டிராவை சேர்ந்த ஜேக்கப் பிராங்களின் என்பவரிடம் இருந்து எம்.டி.எம்.ஏ. என்ற உயர் ரக போதைப்பொருள் மற்றும் கொகைன் வாங்கி இங்கு விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கைதான 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
English Summary
seven peoples arrested for high quality drugs seized in coimbatore