ஆம்பூர் அருகே பரபரப்பு.! மாமியாரை அடித்து கொன்ற மருமகன் கைது.!
Son in law arrested for murdering mother in law in tirupattur
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாமியாரை அடித்து மருமகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சின்ன வெங்கடாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி ஹேமாவதி (57). இவர்களது மகள் உஷாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி பிரேம்குமார் (29) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் உஷாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து உஷாவை சமாதானப்படுத்துவதற்காக மாமியார் வீட்டிற்கு வந்த பிரேம்குமார், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில் இருவரிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் இதனை ஹேமாவதி தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரேம் குமார் மாமியாரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஹேமாவதியை மீட்டு சிகிச்சைக்காக அக்கம் பக்கத்தினர் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஹேமாவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து உஷா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பிரேம்குமாரை கைது செய்தனர்.
English Summary
Son in law arrested for murdering mother in law in tirupattur