சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்..எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தல்!
Special teachers should be made permanent. Leader of the Opposition Siva
புதுச்சேரி அரசுப் பள்ளி சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் பூஜ்ஜிய நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பூஜ்ஜிய நேரத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் பேசியதாவது: –புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த சிறப்பு குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக நான்கு பிராந்தியங்களிலும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மூலம் தேர்வு செய்த 24 சிறப்பு ஆசிரியர்கள் ஒப்பந்த முறையில் பணியாற்றி வருகிறார்கள்.
அவர்கள் தங்கள் நிலையை அரசிடம் எடுத்துச் சொல்லி தங்களை பணி நிரந்தம் செய்ய தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், ஓய்வூதிய வயதை எட்ட இன்னும் சில ஆண்டுகள் உள்ள நிலையில் பணியாற்றும் ஒப்பந்த சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய சட்டமன்றத்தில் நாங்கள் கோரிக்கை வைத்தபோது, மாண்புமிகு முதல்வர் அவர்கள் அவர்களை பணி நிரந்தரம் செய்வதாக உறுதியளித்தார். ஆனால் இன்று வரை அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
சிறப்பு ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் சிக்கிம், நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்துள்ளது.
ஆனால் புதுச்சேரி அரசு தீர்ப்பின் அடிப்படையில் கண், காது, நரம்பு, மூளை வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு சிறப்பு குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க 160 சிறப்பு ஆசிரியர்களை நிரப்புவதற்கான ஆர் ஆர் டிராப்ட் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே பணியாற்றும் தங்களின் நிலை குறித்து சிறப்பு ஆசிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஆகவே, அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் புதுச்சேரி அரசு 24 சிறப்பு ஆசிரியர்களையும் கருணை அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று இந்த அவையின் வாயிலாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
English Summary
Special teachers should be made permanent. Leader of the Opposition Siva