மாணவர்கள் வேறு வழி இல்லாமல் தான் நீட் தேர்வை எழுதுகின்றனர் - அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி..!
Students write NEET without any other option Minister Subramanian interview
இன்று சென்னையில் உள்ள சைதாப்பேட்டையில், காய்கறி மார்க்கெட்டை சீரமைப்பதற்கான ஆய்வு நடந்தது. இந்த ஆய்வில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ் குமார், கமிஷனர் ககன்தீப்சிங்பேடி மற்றும் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
பல நூற்றாண்டுகளுக்கு மேலாக சைதாப்பேட்டை மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு மீன், பழம் மற்றும் காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. இந்நிலையில், இன்று மார்க்கெட்டை சீரமைக்கும் பணிக்கான ஆய்வு நடந்தது. மார்க்கெட் சீரமைக்கும் வரை மாற்று இடம் வழங்கப்படும். மார்க்கெட் புதுபிக்கப்பட்ட பிறகு ஏற்கனவே உள்ள வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்படும். நீட் தேர்வு 2017-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் ஒப்புதலோடு கொண்டு வரப்பட்டது.
இந்த வருடம், ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 988 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி உள்ளனர். இதுவரையில் நடந்த தேர்வில் இந்த வருடம் தான் அதிக மாணவர்கள் பங்கு பெற்றுள்ளனர். அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படித்த 17,517 மாணவர்கள் நீட் தேர்வு எழுதி உள்ளனர். தேர்வு முடிந்த நாளில் இருந்து இதுவரையில் மாணவர்களுக்கு 110 ஆலோசகர்கள் மூலம் மனநல ஆலோசனை வழங்கி வருகிறோம். ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 988 பேருக்கும் மன நல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனையில், 564 மாணவர்கள் அதிக மன உளைச்சல், அழுத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் 98 மாணவர்கள் மாவட்ட அளவில் மாவட்ட மன நலதிட்ட மருத்துவக்குழுவால் நேரடியாக கண்காணிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், நீட் தேர்வுக்கான முடிவு இன்று வெளியாகிறது. மேலும், அதிக மன அழுத்தத்தில் உள்ள 564 மாணவர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். 38 மாவட்டங்களிலும் மாவட்ட மனநல மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் ஒரு வேண்டுகோளாக இதை வைக்கிறோம். நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் யார் என்பதை ஆராய்ந்து அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க உதவிட வேண்டும். மேலும், தேர்ச்சி பெறாத மாணவர்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்கிறோம். தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டு வருவதும் தகுந்த ஆலோசனை மட்டுமின்றி அடுத்து என்ன செய்யலாம் என்ற வழி காட்டுதலையும் வழங்க உள்ளோம்.
இந்த ஆலோசனைகளை பெற 104, 1100 எண்களை தொடர்பு கொள்ளலாம். நீட் தேர்வு மூலம் மருத்துவ படிப்பு படிக்க முடியாத சூழல் ஏற்பட்டால் தங்கள் பிள்ளைகளை திட்டுவது, கடிந்து கொள்வதில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். கடிந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முதலமைச்சர் தொடர் முயற்சி எடுத்து வருகிறார்.
மேலும், ஜனாதிபதியும், உள்துறை அமைச்சகமும் முடிவு எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதற்காக மத்திய அரசின் கருத்துக்களை கேட்பார்கள். நீட் தேர்வை அதிக மாணவர்கள் எழுதுகிறார்கள் என்பதால் அவர்கள் விரும்பி ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் அல்ல. கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வேறு வழியில்லாமல் தான் நீட் தேர்வை எழுதுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
English Summary
Students write NEET without any other option Minister Subramanian interview