டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உயிரிழப்பு.. தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!
Table tennis player Viswa Deenadayalan dies TN CM Stalin condolences
மேகாலயா மாநிலத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் உயிரிழப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
83-வது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மற்றும் 3 வீரர்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து நேற்று காரில் ஷில்லாங் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது ஷாங்பங்களா என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் டிவைடரை தாண்டி வந்து கார் மீது மோதியது.
இந்த விபத்தில் கார் ஓட்டுநர் மற்றும் தீனதயாளன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்ற 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். தீனதயாளனின் உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.
இவரது மறைவுக்கு இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர் துஷ்யந்த் சவுதாலா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் கார் விபத்தில் பலியானதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நம்பிக்கைக்குரிய, இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளனின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. சாதனை புரிந்து வந்த விஷ்வா விரைவில் நம்மை விட்டு பிரிந்தது வேதனை. கார் விபத்தில் உயிரிழந்த விஷ்வா தீனதயாளனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என தெரிவித்துள்ளார்.
English Summary
Table tennis player Viswa Deenadayalan dies TN CM Stalin condolences