விடியல் நாடகத்தை நிறுத்துங்கள் - பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் போக்குவரத்தைக் குறைப்பதற்காக வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படாததால், பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

அந்த வகையில் நேற்று கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும் பேருந்துகள் மிகவும் குறைவாக இருந்ததால், பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-

திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால், பொதுமக்கள் அவதிக்குள்ளாவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, எந்த வித முறையான ஏற்பாடுகளும் செய்யாமல், அவசரகதியில், பேருந்து நிலையத்தை சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிளாம்பாக்கத்துக்கு மாற்றிய திமுக அரசு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து நாற்பது நாட்கள் கடந்தும், இன்னும் பயணிகள் தினம் தினம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை.

நேற்றைய தினம் இரவு, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்குச் செல்வதற்காக, சென்னையின் பல பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த பயணிகள், ஊருக்குச் செல்லப் பேருந்துகள் இல்லாமலும், இருந்த ஒன்றிரண்டு பேருந்துகளும் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததால் பயணிக்க முடியாமலும் நள்ளிரவில் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். குழந்தைகள், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கான பயணிகள் திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் தவித்துள்ளனர். சாலை மறியல் போராட்டம் செய்தும், பேருந்துகளைச் சிறைபிடித்தும் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

பேருந்து நிலையம் முழுமையான செயல்பாட்டுக்கு வந்துவிட்டது என்று கூறிக் கொள்ளும் திமுக அரசு, வார இறுதியில் கூட போதுமான பேருந்துகளை ஏற்பாடு செய்யாமல் இருந்திருப்பது வெட்கக் கேடு. நள்ளிரவில் பயணிகளை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளியிருக்கும் திமுக அரசு முழுவதுமாகச் செயலற்றுப் போயிருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. 

திமுக அரசு, உடனடியாக இந்த திராவிட மாடல், விடியல் என்ற நாடகங்களை நிறுத்திவிட்டு, தங்கள் நிர்வாகத் தோல்வியை ஒப்புக்கொண்டு, அதைச் சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுவதுமாகத் தயாராகும் வரை, பேருந்துகளை மீண்டும் கோயம்பேட்டில் இருந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். அதை விடுத்து, பூசி மொழுகும் வேலையில், பொதுமக்களைத் தொடர்ந்து அவதிக்குள்ளாக்கினால், நேற்றைய பொதுமக்களின் போராட்டம், சென்னை முழுக்க மிகப் பெருமளவில் வெடிக்கும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்" என்றுத் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu bjp leader annamalai tweet about kilambakkam bus issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->