தமிழகத்தை குப்பைத் தொட்டியாக மாற்றும் கேரளா அரசை கண்டிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு பாஜக வலியுறுத்தல்.!
tamilnadu bjp report tn govt for kerala govt dumping wastege in tn border
தமிழகத்தில் பாஜக கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
"கேரளா மாநிலம் தூய்மையில் முதலிடம் வகித்துள்ளது. அதேபோல், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அபராதம் விதிக்காத ஒரே மாநிலமும் கேரளா தான். மேலும், கழிவு மேலாண்மைத் துறையில் கேரளா குறிப்பிடத்தக்க தலையீடுகளை செய்துள்ளது என்று பசுமைத் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது என்று தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது.
ஆனால், கேரளா அரசு மருத்துவ கழிவுகள் மற்றும் மின்னனு கழிவுகள் உள்ளிட்ட அனைத்து கழிவுகளையும் நம் தமிழகத்தின் எல்லையோர கிராமங்களில் அதிலும் குறிப்பாக நீர்நிலைகளில் கொட்டி 'கேரளாவின் குப்பைத் தொட்டியாக' தமிழகத்தை மாற்றி கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.
இதன் மூலம் கேரள அரசு சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிப்பதோடு தமிழர்களின் உயிரோடும் விளையாடி கொண்டிருக்கிறது. ஆனால், தமிழக அரசு இந்த ஆபத்தை மிக அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. இந்த கழிவுகள் தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களின் வழியே தான் செல்கிறது.
ஆனால், இந்த மாவட்ட எல்லைகளில் உள்ள போக்குவரத்து மற்றும் காவல்துறை சோதனை சாவடிகளில் உள்ள அதிகாரிகள் இதனைக் கண்டும் காணாமல் இருப்பது தான் பிரச்சினையின் ஆரம்பம்.
இதையடுத்து, இந்தக் கழிவுகளை எரித்து அழிப்பது யார்? அந்தந்த ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் இந்த கழிவுகள் குறித்து ஏன் குரல் எழுப்புவதில்லை? என்பது ஒரு புரியாத மர்மமாகவே உள்ளது.
இந்த விவகாரத்தில் இனி அமைதி காக்காமல், தமிழகத்தின் சுற்றுப்புற சூழலை அழிக்கும் கேரள அரசை கண்டிப்பது மட்டுமல்லாமல், கடமை தவறும் அனைத்து தமிழக அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடமை மற்றும் பொறுப்பு ஆகும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tamilnadu bjp report tn govt for kerala govt dumping wastege in tn border