வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு.!
tamilnadu government fund allocation for floods affected house
கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் வீடுகளை இழந்த குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"கடந்த 2023, டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டங்களில் வசித்து வந்த பெரும்பாலான ஏழை மக்களின் வீடுகள் பெரிதும் சேதமுற்றன.
அவ்வாறு மழைவெள்ளத்தினால் பகுதியாக சேதமடைந்த வீடுகளை பழுது பார்ப்பதற்கு ரூ.2.00 இலட்சம் வரையும் முழுமையாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாக கட்டுவதற்கு ரூ.4.00 இலட்சம் வரையும் நிவாரணமாக வழங்கப்படும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளிலுள்ள மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பகுதியாக மற்றும் முழுமையாக சேதமடைந்த 955 வீடுகளுக்கு பழுது நீக்கம் செய்யவும் மற்றும் புதிய கட்டுமானத்திற்கும் ரூபாய் 24.22 கோடியும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள 577 சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.21.62 கோடியும் ஆகமொத்தம் ரூ.45.84 கோடி முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tamilnadu government fund allocation for floods affected house