தீபாவளிக்கு எத்தனை மணி நேரம் வெடி வெடிக்க வேண்டும்? எப்படி வெடிக்க வேண்டும்? தமிழக அரசு அறிவுரை..!
tamilnadu government restriction published for firecrackers blast in deepawali
தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் பட்டாசுகள் வெடிப்பதற்கான கால அளவுகள், விதிமுறைகள் ஆகியவற்றை தமிழக அரசு நிர்ணயித்துள்ளன. அதன் விபரம் பின்வருமாறு,
* மக்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை மட்டும் விற்பனை செய்யவும், வெடிக்கவும் வேண்டும்.
* தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதாவது காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
* சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 89ன்படி பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது. தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, வெடிப்பதோ கூடாது.
* பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் வெடிக்க கூடாது. குறிப்பாக மோட்டார் வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களின் அருகிலும் பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் பெட்ரோல் நிலையங்கள் அருகிலும் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.
* பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்து விட்டு, வேடிக்கை பார்க்க முயற்சித்தால், வெடிக்கும் பட்டாசு அருகில் இருப்பவர்கள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். ஆகவே, பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடக்கூடாது.
* மக்கள் நடமாடும் இடத்தில் கவனக் குறைவாக பட்டாசுகளை வெடிக்காதீர்கள். பட்டாசுகளை வெடிக்கும் பொழுது தகர டப்பாக்களை போட்டு மூடி வேடிக்கைப் பார்த்தால் வெடியினால் டப்பா தூக்கி எறியப்படலாம். அதனால் பல விபத்துகள் நேரிடக்கூடும்.
* குடிசைப் பகுதிகளிலும், மாடிக்கட்டிடங்கள், எரியும் விளக்குகளுக்கு அருகிலும் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக் கூடாது.
* ஈரமுள்ள பட்டாசுகளை சமையலறையில் வைத்து உலர்த்தக்கூடாது.
* மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.
* பட்டாசு விற்பனையாளர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் மெழுகுவர்த்தியையோ பெட்ரோமாக்ஸ் அல்லது சிம்னி விளக்கையோ கடை அருகிலோ அல்லது கடையிலோ உபயோகிக்கக் கூடாது.
* பட்டாசுகளை வெடிப்பதற்கு தீக்குச்சிகளையோ அல்லது நெருப்பையோ உபயோகிப்பதை விட நீளமான ஊதுவத்தி உபயோகித்து ஆபத்துகளை தவிர்க்கவும்.
English Summary
tamilnadu government restriction published for firecrackers blast in deepawali