தமிழகத்தில் இரு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!
Tamilnadu rain alert Fengal cyclone
நேற்று (01-12-2024) காலை வடதமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நிலவிய "ஃபெஞ்சல்" புயல், மதியம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலுக்குறைந்து, வடதமிழக உள் பகுதிகளில் நிலவுகிறது.
இது, நாளை காலை தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று 02-12-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் சமவெளிப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை 03-12-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
04-12-2024 முதல் 08-12-2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
English Summary
Tamilnadu rain alert Fengal cyclone