கோவில் உண்டியலை உடைக்க நூதன முறையில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்!
temple bill break robbers
கடலூர், விருத்தாச்சலம் எம்.ஆர்.கே நகரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய இன்று காலை 6 மணி அளவில் பக்தர்கள் வந்தனர்.
கோவில் மூடி இருந்ததால் வெளியில் நின்றபடி சாமி தரிசனம் செய்தனர். அப்போது கோவிலின் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் அந்த இடத்தில் இல்லாமல் கோவில் உட்பிரகாரத்தின் ஓரம் உள்ள கேட் அருகில் இருந்தது.
இதனை சந்தேகத்துடன் அருகில் சென்று பக்தர்கள் பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளை அடிக்க பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இது தொடர்பாக விருத்தாச்சலம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டு, பின்னர் ஊர் பிரமுகர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊர் பிரமுகர்கள் கோவில் பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு உடைக்கப்பட்டு இருந்த உண்டியலில் இருந்த பணம் கொள்ளை அடிக்க பட்டிருந்தது.
கோவிலின் நடுப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை முன் பகுதி வளைக்கபட்டு இரும்பு கம்பியால் கேட் அருகே இழுத்துச் சென்று உண்டியலை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
மேலும் உண்டியலை இழுக்க பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பியும் கேட் அருகிலேயே இருந்தது. இது குறித்த தகவல் அறிந்த விருத்தாச்சலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடந்த 9 மாதத்திற்கு மேலாக திறக்கப்படாததால் உண்டியலில் சுமார் ரூ. 1 லட்சம் காணிக்கை பணம் இருந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து போலீசார் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்களையும் சம்பவ இடத்திற்கு வரவழைத்து அங்கிருந்த தடயங்களை ஆய்வு செய்து சேகரித்தனர்.
இந்த நிலையில் போலீசார் எம்.ஆர்.கே நகரில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியில் இருந்த கோவிலில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பளம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
temple bill break robbers