அய்யா... இன்னும் சம்பளம் வரல?! - தத்தளிக்கும் தற்காலிக ஆசிரியர்கள்!
temporary teachers not getting salary
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37,554 அரசு பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 52.75 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் 2.24 லட்சம் பேர் பணியில் உள்ளனர்.
இதற்கிடையே அரசு பள்ளி ஆசிரியர்களின் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க பள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கியது.
அதன்படி அரசு பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் இருந்து மேலாண்மை குழு, தற்காலிக ஆசிரியர்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்காலிக ஆசிரியர்களுக்கு முறையான ஊதியம் கொடுப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்திருப்பதாவது, ''தற்காலிக அடிப்படையில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் ஒழுங்கற்ற முறையில் வழங்கப்படுகின்றது.
மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தான் சம்பளம் வழங்குகின்றனர். இந்த வேலையை நம்பியுள்ள பட்டதாரிகளின் வாழ்வாதாரம் இதனால் பாதிப்படைகிறது.
பள்ளிக்குச் சென்று வருவதற்கு கூட கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சரியான முறையில் மாதம் தோறும் ஊதியம் வழங்கினால் நன்றாக இருக்கும்.
கடந்த ஆண்டு போலவே நடப்பு ஆண்டிலும் தாமதம் செய்து வருகின்றனர். நடப்பு ஆண்டில் பள்ளிகள் திறந்து மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை ஊதியம் அளிக்கப்படவில்லை.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார். இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் தெரிவித்திருப்பதாவது, அரசு பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு நிதி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்குனரகம் மூலம் ஊதியம் தருவதற்கான ஏற்பாடுகள் செய்து வரப்பட்டுள்ளது.
அதனால் தாமதம் ஏற்பட வாய்ப்பு இல்லை. சில பள்ளிகளில் ஆசிரியர்களின் பெயர் பட்டியலில் தற்காலிக ஆசிரியர்களின் பெயர் சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம்.
இது குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
English Summary
temporary teachers not getting salary