மாடு பிடி வீரருக்கு கார் பரிசா? இயக்குனர் தங்கர் பச்சான் தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கை.!!
thangar bachan says about car gift
ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு கார் பரிசாக அளிப்பதற்கு பதிலாக உழவுத் தொழில் தொடர்பான கருவிகளை பரிசாக அளிக்கலாம் என இயக்குனர் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்ற ஆண்டும் போட்டியில் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு வீரருக்கு கார் பரிசளித்த போது இதே கோரிக்கையை அரசிடம் அளித்திருந்தேன். ஆனால் அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு வீரருக்கு முதல் பரிசாக முதலமைச்சர் கார் வழங்குவதாக செய்தியை அறிகிறேன்.
வீரர்கள் உயிரைப்பணயம் வைத்து பங்கு பெரும் இப்போட்டிகளை நடத்துவதில் ஒவ்வொரு தமிழரும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றோம்! இப்போட்டியில் வென்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்படும் பரிசுகள் குறித்து இப்பொழுதாவது அரசு சிந்திக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே இதேபோல் காரினைப் பரிசாகப் பெற்ற வீரர்கள் எந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள்? எந்த மாதிரியான வாழ்க்கையை இப்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
காரின் தொகைக்கு ஈடாக அந்த வீரனுக்கு உழவுத் தொழில் தொடர்பான கருவிகள், மாடுகள்,நிலம் இவைகளைத் தந்து அவருடைய வாழ்வுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தித் தந்தால் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியை நாம் அடையலாம்! பரிசு தரும் காரை வைத்துக்கொண்டு (எரிபொருள்) பெட்ரோல் டீசல் விற்கும் விலையில் அதற்கு செலவழிப்பதற்காகவே அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். தயவு கூர்ந்து முதலமைச்சர் இக்கோரிக்கைக் குறித்து சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
thangar bachan says about car gift