அரசு பேருந்தில் தூய்மை பணியாளர்களுக்கு தடையா? தஞ்சையில் சாலை மறியல் போராட்டம்!
Thanjai Cleaning Staff protest july
தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், அரசு பேருந்துகளில் தங்களை ஏற்ற மறுப்பதாகவும், தங்களை கண்டால் பேருந்துகள் நிற்காமல் செல்வதாகவும் குற்றம் சாட்டி இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 50க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தஞ்சை பழைய பேருந்து நிலையம் வந்து நகரப் பேருந்தில் ஏறி தூய்மை பணிக்காக மருத்துவமனைக்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில், பேருந்துகளில் தங்களை ஏற்ற மறுப்பதாகவும், தங்களை கண்டால் பேருந்துகள் நிற்காமல் செல்வதாகவும், பேருந்துகள் முறையாக இயக்கப்படவில்லை என்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவெடுத்து, இன்று, காலை சாலையின் நடுவே தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்திற்கு செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனால் அவர்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதன் பின்னர், சுமார் 45 நிமிடங்கள் கழித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து, அவர்களை சமாதனம் செய்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தான் அவர்கள் போராட்டத்தை நிறுத்தினர்.
English Summary
Thanjai Cleaning Staff protest july