காரைக்காலில் நடைபெற இருக்கும் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்..அதிமுக வலியுறுத்தல்!
The meeting to be held in Karaikal should be cancelled AIADMK insists
மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயன உற்பத்தி செய்யும் இத்தொழிற்சாலையின் உற்பத்தித் திறனை இரு மடங்குக்கு அனுமதி வழங்க 10-04-2025 காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் பொது மக்களின் கருத்துக் கேட்புக் கூட்டத்தை உடனடியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மக்களின் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் இன்று முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:புதுச்சேரி மாநிலம்,காரைக்கால் மாவட்டம், டி ஆர் பட்டினம், கொம்யூன் பஞ்சாயத்து, வாஞ்சூர் கிராமத்தில் M/S.கெம்ப்ளாஸ்ட் சன்மார் லிமிடெட் என்ற தொழிற்சாலை இயங்கி வருகிறது இத்தொழிற்சாலையில் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எத்திலீன் டை குளோரைடு (C2H2CL2) மற்றும் காஸ்டிக் சோடா (NaOH) உற்பத்தி செய்யப்படுகிறது இங்கு தினசரி 3.50 லட்சம் லிட்டருக்கு மேல் நிலத்தடி நீர் உபயோகப்படுத்தப்படுகிறது.
இங்கு காஸ்டிக் சோடா ஒரு ஆண்டுக்கு 54750 டன்னும், எத்திலீன் டை குளோரைடு ஒரு ஆண்டிற்கு 84000 டன்னும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உற்பத்தி திறனை அதிகரிக்கும் நோக்கில் காஸ்டிக் சோடா 54750 டன்னிலிருந்து 109500 டன்னாகவும், எத்தினால் டை குளோரைடு ஆண்டுக்கு 84000 டன்னிலிருந்து 146000 டன்னாகவும், ஆக தற்போது உற்பத்தித் திறனை 100 சதவிதம் அதாவது இரு மடங்கு அதிகரிக்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதற்காக சுற்றுப் புறச்சூழல் அனுமதியின் ஒரு பகுதியாக பொதுமக்களின் கருத்துக்களை
10-4-20205 அன்று காரைக்கால் மாவட்டத்தில் கேட்கப்படும் என புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.உலகளவில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இவ்விரண்டு திரவ இரசாயன பொருட்கள் தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
*இந்த ரசாயன தொழிற்சாலையிலிருந்து கண்ணுக்கு தெரியாத நச்சு புகைகள் வெளியேறுவதன் மூலம் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, மூலை சுருங்குதல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் அறிவியல் சுகாதாரத் துறை வல்லுநர் குழு ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*ஏற்கனவே பல லட்சக்கணக்கான லிட்டர் நிலத்தடிநீரைஉறிஞ்சும் இந்த தொழிற்சாலைக்கு தனது உற்பத்தியை இருமடங்கு உயர்த்துவதன் மூலம் அதிகப்படியான நிலத்தடி நீர் உறிஞ்சப்படும்.
குடியிருப்புபகுதியின் மிக அருகாமையில் இந்த நிறுவனம் செயல்படுவதால் இந்த நிறுவனத்தில் என்றாவது வாய்வு கசிவு ஏற்பட்டால் போபால் விஷ வாய்வில் பாதிக்கப்பட்ட மக்கள் போன்று இங்கும் பாதிக்கப்படுவர்.
மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இது போன்ற இரசாயன நிறுவனங்களின் உற்பத்தியை இரு மடங்காக உயர்த்த அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டதா?என தெரியவில்லை. மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இரசாயன தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறனை இரு மடங்காக்க சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் இவ்வேளையில் உரிய முன் நடவடிக்கைகளை மேற்கொள்ள சுற்றுப் புறச்சசூழல் அதிகாரிக்கு அனுமதி வழங்கியவர்கள் யார்?
மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயன உற்பத்தி செய்யும் இத்தொழிற்சாலையின் உற்பத்தித் திறனை இரு மடங்குக்கு அனுமதி வழங்க 10-04-2025 காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் பொது மக்களின் கருத்துக் கேட்புக் கூட்டத்தை உடனடியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மக்களின் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும் என கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார். இந்நிகழ்வின் போது மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி,மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
English Summary
The meeting to be held in Karaikal should be cancelled AIADMK insists