தேனி || மழைக்காலத்தால் பள்ளிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் - ஆட்சியர் உத்தரவு.!
theni district collecter visit in solaiyur government school
தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைக்கரைப்பட்டி ஊராட்சி சோலையூர் பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் கட்டுமானப்பணிகளையும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைக்கும் பணியினையும் பார்வை யிட்டார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ஆண்டி ஓடையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தடுப்பணையினையும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில், அமைக்கப்பட்டுள்ள பேவர்பிளாக் பணியினையும், நபார்டு திட்டத்தின் கீழ் அத்தியயூத்து பகுதியில் வலசைத்துறை சாலை முதல் அத்தியூத்து சாலை ஓடையில் பாலம் அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ராஜவாய்கால் கால்வாயில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தடுப்பணையினையும் பார்வையிட்டு, அதன் பணிகளை விரைந்து முடித்து விரைவில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதன் பின்பு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதைத் தொடார்ந்து, சோலையூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் செயல்பாடுகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆசிரியர்களின் எண்ணிக்கை, பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, வருகைப்பதிவேடு குறித்து ஆய்வு செய்தார்.
மேலும் தற்போது, மழைகாலமாக உள்ளதால் பள்ளி வகுப்பறை, மாணவ மாணவிகளுக்கு சுகாதாரமான குடிநீர், கழிப்பறை மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது ஆட்சியருடன் போடிநாயக்கனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனலெட்சுமி மற்றும் ஞானதிருப்பதி உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் உடனிருந்தனர்.
English Summary
theni district collecter visit in solaiyur government school