ஆட்டோவில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது!
Three arrested for smuggling ganja in autorickshaw
ஆந்திராவில் இருந்து ஆட்டோவில் கஞ்சா கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஆந்திர மாநில எல்லையில் இருந்து கோலார் மாவட்டத்துக்கு அடிக்கடி கஞ்சா கடத்தி வந்து சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கஞ்சா கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து பங்காருபேட்டை வழியாக கஞ்சா கடத்தி வரப்படுவதாக கோலார் தங்கவயல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பங்காருபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தாயனந்த், தலைமையில் போலீசார் உதுகுலா கேட் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் நள்ளிரவில் அந்த வழியாக வந்த ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் ஆட்டோவில் இருந்த 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்திய போது ஆட்டோவில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், ஆட்டோவில் சோதனை செய்தபோது, கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . மேலும் இதுகுறித்து 3 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில்
அவர்கள் பெங்களூருவை சேர்ந்த பிரபு, பரத் உள்பட 3 பேர் என்பதும், அவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி பெங்களூருவில் விற்பனை செய்ய பங்காருபேட்டை வழியாக கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா, ஒரு ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து பங்காருபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பின்னர் போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
Three arrested for smuggling ganja in autorickshaw