சிலிண்டர் விலை உயர்வு - ஒன்றிய அரசுக்கு மக்கள் மீது கரிசனம் வருமா? - தவெக தலைவர் விஜய்.!!
tvk leader vijay condemns sylunder price increase
மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வுக்கு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-
"ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு விலை உயர்வு, சாமானிய மக்கள் மீது நடத்தும் நேரடித் தாக்குதலாகும். மக்களின் அன்றாட வாழ்வே போராட்டமாக இருக்கின்ற சூழலில், ஒன்றிய அரசின் இந்த விலையேற்றம், மக்களை மேலும் வாட்டி வதைப்பதாகவே அமைந்துள்ளது.

ஒவ்வொரு முறையும் சமையல் எரிவாயு வாங்கும் போது, அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பைக் காற்றில் பறக்கவிட்ட ஒன்றிய ஆட்சியாளர்கள், மக்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கின்றனர்.
மக்களுக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்றும் வகையில் சமையல் எரிவாயு விலையை ஒன்றிய அரசு அதிரடியாக உயர்த்தியிருப்பது ஏற்க முடியாது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதையும், தேர்தலுக்குப் பின்னர் விலையை ஏற்றுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்.
ஒன்றிய அரசிற்கு, மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது வரும்? தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்கள் மீது கரிசனம் வருமா? கடந்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக, 'கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுப்போம்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக அரசும், நான்கு ஆண்டுகளைக் கடந்தும் எதுவும் செய்யவில்லை.
பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி, வாட்டி வதைப்பதில் ஒன்றிய பாஜக அரசும் திமுக அரசும் இணைந்த கைகளாகவும், இரட்டைக் குழல் துப்பாக்கியாகவும் செயல்படுகின்றன.

சாமானிய மக்களைப் பெரிதும் பாதிக்கும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு மீது பழிபோட்டுவிட்டுத் தப்பித்து விடலாம் என்ற நினைப்பில் இருக்கும் திமுக அரசு, இந்த நேரத்திலாவது மனசாட்சிப்படி, தேர்தல் அறிக்கையில் அறிவித்த சமையல் எரிவாயு மானிய வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்.
மீண்டும் மீண்டும் பொய் சொல்லி, ஏமாற்றும் வழக்கத்துடன் செயல்படும் ஒன்றிய பாஜக அரசு மற்றும் திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, மக்கள் போராட்டத்தின் எதிர்வினை மிகத் தீவிரமாக இருக்கும். மக்களோடு தமிழக வெற்றிக் கழகம் களத்தில் நிற்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
English Summary
tvk leader vijay condemns sylunder price increase