திருநெல்வேலி | கந்து வட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த காங்கிரஸ் பெண் பிரமுகர் கைது!
Tirunelveli Congress leader arrested
களக்காடு அருகே வட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த காங்கிரஸ் பிரமுகர் கைது
நெல்லை மாவட்டம்: களக்காடு அருகே தெற்கு மீனவன்குளம், நேரு தெருவை சேர்ந்தவர் இசக்கி (வயது 32). இவர் தொழிலாளி. இவரது மனைவி எஸ்தர் மரியா. இவர்களுக்கு 4 ஆண் குழந்தைகளும், 1 பெண் குழந்தையும் உள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு இவர் தனது குடும்ப செலவுக்காக கீழதுவரைகுளத்தை சேர்ந்த கணபதி மனைவி ராணி (வயது 50) என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இவர் காங்கிரஸ் பிரமுகர் ஆவார்.
இந்த பணத்திற்காக மாதம் தோறும் ரூ. 2,500 வட்டி செலுத்தி வந்த நிலையில், இந்த மாதத்திற்கான வட்டி செலுத்தவில்லை என தெரிய வந்ததும் ராணி, இசக்கி வீட்டிற்கு சென்று அவரது மனைவி எஸ்தர் மரியாவிடம் வட்டி கேட்டு தகாத வார்த்தைகளால் அவதூறாக பேசியுள்ளார்.
இது பற்றி எஸ்தர்மரியா அவரது கணவர் இசக்கியிடம் தெரிவித்ததால், இசக்கி இதுபற்றி ராணியிடம் கேட்டுள்ளார். அதற்கு ராணி வட்டி தரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக தெரிவித்து, ஆபாசமாக பேசியுள்ளார்.
இதனால் இசக்கியின் மனைவி எஸ்தர் மரியா இது குறித்து களக்காடு காவல் நிலையத்திற்கு சென்று புகார் செய்தார். இதற்கிடையே வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்து, மனைவியை அவதூறாக பேசியதால் மனமுடைந்த இசக்கி, நேற்று முன்தினம் இரவு திடீர் என விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் செய்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்து தற்போது, அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கந்துவட்டி கேட்டு மிரட்டிய ராணி மீது களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
English Summary
Tirunelveli Congress leader arrested