பள்ளி வகுப்பறையில் மது அருந்திய மாணவர்கள்! புத்தகம் ஏந்தும் கைகளில் மதுபாட்டில் - தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்!
TTV Dhinakaran Condemn to TNGovt School student liquor kovai
பிரபல செய்தி நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், "அண்மையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்கள், வகுப்பு நேரத்தில் வகுப்பறையில் உட்கார்ந்து கொண்டு குளிர்பானத்துடன் மதுபானத்தை கலந்து கொடுத்ததாகவும், இதனால் அந்த மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து ஆசிரியர் தரப்பில் கவுன்சிலிங் வழங்கப்பட்டதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் மதுபானம் அருந்திய மாணவர்கள் மூன்று பேரில், ஒரு மாணவன் தனது தந்தை வைத்திருந்த பணத்தில் 4000 ரூபாய் பணத்தை எடுத்து, பிரியாணி சாப்பிட்டு, மது அருந்தியதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன், "புத்தகங்களும், பேனாக்களும் இருக்க வேண்டிய கைகளில் அண்மைக் காலமாக மதுபாட்டில்களும், போதைப் பொருட்களும் தாராளமாக புழங்குவதாக வரும் செய்திகளை பார்க்கும் போது இளைய தலைமுறையான பள்ளி மாணவர்களின் எதிர்காலம் குறித்த அச்ச உணர்வை அதிகரிக்கச் செய்கிறது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதை கட்டுப்படுத்தவோ, அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வோ ஏற்படுத்தாதன் விளைவாக பள்ளி வகுப்பறைக்குள்ளே அமர்ந்து மாணவர்கள் மது அருந்தும் அளவிற்கான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், சமுதாயத்தில் முன்னேற்றப் பாதையை நோக்கி பயணிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அரசு நிர்வாகம், அதனை செய்யத் தவறியதால் சிறு வயதிலேயே மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி ஆசிரியர்களை கேலி செய்வதும், தாக்குதல் போன்ற அநாகரீகமான செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகின்றன.
எனவே, மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்களை, அதிலிருந்து மீட்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி அரசுக்கும் இருக்கிறது என்பதை இனியாவது உணர்ந்து, பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே இயங்கி வரும் மதுபானக்கடைகளை உடனடியாக அகற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
TTV Dhinakaran Condemn to TNGovt School student liquor kovai