"அமைச்சர் கிட்ட மனு கொடுத்தாலும் எங்க கிட்ட தான் வரனும்"..! மனுதாரர்களை மிரட்டும் விஏஓக்கள்..!!
VAOs threatening the petitioners in kallakurichi
கள்ளக்குறிச்சி மாவட்டம் முருக்கம்பாடி, சித்தப்பட்டிணம், திருவரங்கம், ஜம்படை, சீர்பனந்தல், சிறுபனையூர் ஆகிய ஊராட்சிகளில் ‘மக்களைத் தேடி' மனுக்கள் பெறும் முகாம் பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறை முகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில், எம்எல்ஏக்கள் தா.உதயசூரியன், வசந்தம்.க.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 1,931 மனுக்களை அமைச்சர் பெற்று கொண்டு இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து தகுதியான மனுக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். தகுதியற்ற மனுக்களுக்கு உரிய பதிலினை வழங்கிட வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் 184 பயனர்களின் கோரிக்கை ஏற்று தீர்வு கண்டு, அதற்கான ஆணையை வழங்கினார். இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் எ.வ வேலு எஞ்சி மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும். தீர்வு காண முடியாத மனுதாரர்களுக்கு அதற்கான விளக்கத்துடன் கடிதம் அளிக்கப்படும். மனு என்னவானது என்ற கவலை வேண்டாம் என்று தெரிவித்தார்.
அப்போது வயதான சிலர் பலமுறை மனு அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை. அமைச்சரிடம் கொடுக்கும் மனுவுக்காவது தீர்வு கிடைக்குமா என ஏக்கத்துடன் முனுமுனுத்தனர்.
அப்போது அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் "மந்திரிகிட்ட மனு கொடுத்தாலும் மணியகாரர்கிட்ட தான் வந்து சேரும். அதனால், வந்தோமா மனுவை கொடுத்தோமானு இருங்க" என அந்த முதியோரை கண்டித்துள்ளார். இதே பாணியில் மற்ற கிராம நிர்வாக அலுவலர்களும் கூறியது மனுதாரர்களை கவலையடை செய்தது. இந்நிகழ்வு மனுதாரர்களை கிராம நிர்வாக அலுவலர்கள் எவ்வாறு நடத்துகின்றனர் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது.
இந்நிகழ்ச்சிகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரா.மணி, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெ.யோகஜோதி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
VAOs threatening the petitioners in kallakurichi