சென்னை : கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை 'கிடு கிடு' உயர்வு!!
Vegetables Price Hike in Chennai Koyambedu Market
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை நாள்தோறும் 'கிடு கிடு' வென உயர்ந்து வருகிறது. தற்போது வெயில் வாட்டி வந்தாலும் அவ்வப்போது சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது. மழை காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைந்து உள்ளது.
இதையடுத்து கோயம்பேடு சந்தையில் ஒரு மாதத்திற்கு முன்பு கிலோ ரூ. 24 க்கு விற்ற தக்காளி நேற்று கிலோ ரூ. 60க்கு விற்கப் பட்டது. இதையடுத்து சில்லறை விற்பனை சந்தைகளான ஜாம்பஜார், அரும்பாக்கம், தியாகராய நகர் ஆகிய சந்தைகளில் தக்காளி கிலோ ரூ. 80க்கு விற்கப் பட்டது. மேலும் கோயம்பேடு சந்தையில் மற்ற பிற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.
அதன்படி முருங்கைக்காய் ரூ. 70, முள்ளங்கி ரூ. 50, அவரைக்காய் ரூ. 80, வெண்டைக்காய், ரூ. 30, பீன்ஸ் ரூ. 150, புடலங்காய் ரூ. 30, கத்தரிக்காய் ரூ. 20, பச்சை மிளகாய் ரூ. 50, கேரட் ரூ. 40, பாகற்காய் ரூ. 30, பீட்ரூட் ரூ. 25 என்று விலை உயர்ந்து விற்பனையாகி வருகிறது.
இதுகுறித்து கூறிய கோயம்பேடு சந்தை வியாபாரி, "பொதுவாக ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து தான் காய்கறிகள் சந்தைக்கு வருகின்றன. அங்கு தென்மேற்கு மழை இன்னும் தீவிரம் அடையவில்லை. மேலும் இது அறுவடைக் காலம். எனவே தான் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது" என்று கூறினார்.
English Summary
Vegetables Price Hike in Chennai Koyambedu Market