எடப்பாடியில் உதயநிதியின் பாதுகாப்பு வாகனத்தின் குறுக்கே குட்டியானை புகுந்ததால் பரபரப்பு..!!
Vehicle across Udayanidhi security car near Edappadi
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சேலம் வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலம் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி பிரமுகரின் இல்ல திருமண விழா நிகழ்வு, அரசு நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கான விருது நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக சேலத்தில் இருந்து எடப்பாடி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது கோவை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் பாதுகாப்புடன் சென்று கொண்டிருக்கும் பொழுது எடப்பாடி அடுத்த கந்தன்பட்டி எனும் இடத்தில் அமைச்சர் உதயநிதிக்கு பாதுகாப்பாக சென்ற விஐபி எஸ்கார்டு வாகனம் முன்பு திடீரென குட்டியானை சரக்கு வாகனம் விபத்தை ஏற்படுத்தும் விதமாக திடீரென நுழைந்தது. இதனை கண்டு சுதாரித்துக் கொண்ட போலீசார் விபத்து ஏற்படுத்தாமல் வாகனத்தை கட்டுப்படுத்தி நிறுத்தினர்.
பின்னர் சம்பந்தப்பட்ட சரக்கு வாகனத்தின் ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டனர். அமைச்சர் உதயநிதி வருகை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் இத்தகைய சம்பவம் அரங்கேறியது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் உயர் அதிகாரிகள் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Vehicle across Udayanidhi security car near Edappadi