'ஜஸ் நீதான் உலகிலேயே சிறந்த கிரிக்கெட் வீரர்'; பும்ராவை புகழ்ந்த சச்சின்..!
Sachin praised Bumrah
உலகிலேயே சிறந்த கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா தான் என, சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட 2024 - 25 பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்துள்ளது.
தொடரில் இந்திய அணி மிக மோசமாக செயல்பட்டு தோல்வியை தழுவியது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றது. மற்ற நான்கு போட்டிகளில் ஆஸ்திரேலியா மூன்று வெற்றிகளை பெற்று, 03 - 01 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றது.
அத்துடன், ஆஸ்திரேலியா அணி பார்டர் - கவாஸ்கர் ட்ராபியை 10 ஆண்டுகளுக்குப் பின் கைப்பற்றியுள்ளது. குறித்த போட்டியில், இந்திய அணி மோசமாக செயல்பட்ட போதும் பும்ரா மட்டுமே தொடரில் இரண்டு அணிகளிலும் சேர்த்து பார்த்தாலும் சிறப்பாக செயல்பட்ட வீரராக இருக்கிறார்.
பும்ரா இந்த தொடரில் 09 இன்னிங்ஸ்களில் மட்டுமே பந்து வீசி, 32 விக்கெட்களை வீழ்த்தினார். அதன் மூலம் இந்த தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளராகவும் இருக்கிறார்.
அவர் 13.06 என்ற குறைந்த பவுலிங் சராசரியுடன் அவர் 32 விக்கெட்களை வீழ்த்தியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இந்த தொடரின் முடிவில் பும்ராவுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த டெஸ்ட் தொடர் பற்றி சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் ஆஸ்திரேலியாவை அவர் பாராட்டிஇருந்தாலும், பும்ராவை உலகின் சிறந்த வீரர் என குறிப்பிட்டு இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டு இருக்கும் அந்தப் பதிவில், "இந்த தொடரில் 0-1 என்ற நிலையில் இருந்து, 3-1 என தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணியின் அதிகாரம் மிக்க செயல்பாட்டை வெளிக்காட்டுகிறது.
அவர்கள் பார்டர் - கவாஸ்கர் ட்ராபியை வென்றதற்கு பாராட்டுக்கள். இங்கே நான் ஜஸ்பிரித் பும்ரா பற்றி சிறப்பாக குறிப்பிட விரும்புகிறேன். "ஜஸ்.. இந்த உலகின் சிறந்த வீரர்" என்று குறிப்பிட்டு இருக்கிறார். அது பும்ரா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.