அரசு அதிகாரிக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? - கொந்தளிக்கும் விஜயகாந்த்!
Vijayakanth Condemn to VAO killed
விஏஓ கொலை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று, தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து பகுதியில் மணல் கொள்ளை குறித்து காவல் துறையில் புகார் கொடுத்த கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் என்பவரை, அவரது அலுவலகத்தில் புகுந்து 2 நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சம்பவத்தின் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கேள்வி குறியாகியுள்ளது. இது மக்களிடையே அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு அரசு அதிகாரிக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? கிராம நிர்வாக அதிகாரி கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் தமிழக மக்கள் பாதுகாப்பாக வாழ திமுக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Vijayakanth Condemn to VAO killed