சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகள்.!
Vulnerable booths in Chennai
சென்னையில் 1,061 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனவும் 182 வாக்குச்சாவடி மையங்கள் மிகவும் பதற்றமானவை எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; "நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் பெருநகர சென்னை மாநகராட்சி 200 வார்டுகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 19-2-2022 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர், அரசு முதன்மை செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர். திரு. ககன்தீப் சிங் பேடி அவர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் இன்று ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி 200 வார்டுகளுக்கான தேர்தலில் இறுதி செய்யப்பட்டுள்ள 5,794 வாக்குச்சாவடி மையங்களில் 1,061 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனவும் 182 வாக்குச்சாவடி மையங்கள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் இம்மையங்களில் வாக்கு பதிவினை கண்காணிக்கும் பொருட்டு, இணையதள வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் (Web Stream) அல்லது கண்காணிப்பு கேமரா (CCTV) பொருத்தப்பட்டு ஒரு நுண் பார்வையாளர் (Micro Observer) நியமிக்கப்பட உள்ளனர். காவல்துறையின் சார்பில் இம்மையங்களில் உதவி ஆய்வாளர் ஒருவர் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆணையாளர்கள் டாக்டர் என். கண்ணன், திரு. செந்தில்குமார், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், துணை ஆணையாளர்கள் திரு. விஷு மகாஜன், திரு எம்.எஸ்.பிரசாத், திருமதி. சினேகா, திரு.சிம்ரன்ஜித், திரு. ஷேக் அப்துல் ரகுமான், திரு. எம்.சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் இணை ஆணையாளர்கள், காவல் துணை ஆணையாளர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Vulnerable booths in Chennai