சென்னையில் பசி, பட்டினியால் பலியான மே.வ தொழிலாளி - தமிழர்கள் வாழும் தமிழகத்தில் அவலம்!
West Bengal labour Starving with hunger death in chennai
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி, சென்னையில் பசி பட்டினியால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், தமிழகத்திற்கு தலைகுனிவையும் ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சமர்கான் 4 நாட்களாக பசி பட்டினியால் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 11 பேர் கடந்த மாதம் வேலை தேடி சென்னைக்கு வந்துள்ளனர்.
பின்னர் பொன்னேரி பகுதியில் 3 நாள் விவசாய வேலை செய்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு விவசாய பணி கிடைக்காமல், சாப்பிடவும் வழி இல்லாமல் தவித்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் 11 பேரும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சொந்த ஊருக்கு புறப்பட முயற்சி செய்துள்ளனர்.
அதுவரை சுமார் நான்கு நாட்களுக்கும் மேலாக அவர்கள் உணவு அருந்தாமலேயே இருந்துள்ளனர். இதில் ஐந்து பேர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே மயங்கி விழுந்துள்ளனர்.
அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டு பேர் சிகிச்சை முடிந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சிகிச்சை பெற்று வந்த சமர்கான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சோற்றில் கை வைக்கும் முன் வாசல் வந்து யாரேனும் பசியில் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு உண்ணக்கூடிய தமிழர்கள் வாழும் தமிழகத்தில், வந்தவர்களுக்கு உணவு அளித்தபின் உண்ணும் பழக்கமுடைய தமிழர்கள் வாழும் தமிழகத்தில், ஆயிரம் பேர் கூட்டி உணவளித்து திருமணம் செய்யும் தமிழர்கள் வாழும் தமிழகத்தில், யானைக்கட்டி உழவு செய்த தமிழர்கள் வாழும் தமிழகத்தில் பசி பட்டினியால் வேலை தேடி வந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலை தேடி வரும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பையும், அவருக்கான வேலையையும் உறுதிப்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. குறிப்பாக தமிழக அரசு இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
English Summary
West Bengal labour Starving with hunger death in chennai