மழையை அளப்பது எப்படி? விளக்கம் இதோ.! மழையை எவ்வாறு அளக்கிறார்கள்?
How to measure rain
வானிலை செய்திகள் கேட்டிருப்பீர்கள்... கடந்த 24 மணி நேரத்தில் இங்கு 500 மில்லி மீட்டர் மழை... அங்கு 300 மில்லி மீட்டர் மழை என்று கூறி கேட்டு இருப்போம்.
தண்ணீர் என்பது திரவம்... அதை லிட்டர் அளவில்தானே குறிப்பிட வேண்டும்? ஏன் மீட்டர் அளவில் சொல்கிறார்கள்? என்று யோசித்திருக்கிறீர்களா?
மேலும் மழையை எப்படி அளக்கிறார்கள்? என்கிற சந்தேகமும் உங்களுக்கு தோன்றியிருக்கிறதா? அவை எவ்வாறு அளவிடப்படுகிறது என்பது குறித்து இப்பகுதியில் பார்க்கலாம்...
எவ்வாறு அளக்கப்படுகிறது?
வானிலை ஆராய்ச்சி மையங்களில் 'உடோமீட்டர்" என்று கூறப்படும் மழை மானி கருவி இருக்கும். இதைப் பயன்படுத்தித்தான் மழையை அளந்து, 'இத்தனை மில்லி மீட்டர் மழை பெய்தது" என்று சொல்கிறார்கள்.
ஒரு சதுர மீட்டருக்கு, 24 மணிநேர கால அளவில் எவ்வளவு மழை பொழிந்திருக்கிறது என்பதை அதன் மூலம் அறிவார்கள். அதை வைத்து ஒரு குறிப்பிட்ட பகுதியில் எவ்வளவு மழை பெய்தது என்று கணக்கிடுவார்கள்.
ஒரு மில்லி மீட்டர் மழை என்பது, ஒரு சதுர மீட்டருக்கு 1 லிட்டர் என்பதற்குச் சமம். எனவே, 10 மில்லி மீட்டர் மழை என்று பதிவானால், அதை 10 லிட்டர்ஃசதுர மீட்டர் என்று எடுத்துகொள்ள வேண்டும்.
தற்போது பல வகையான தானியங்கி மழை மானிகள் கிடைக்கின்றன. அது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மழை அளவை குறித்து தகவல் தந்துவிடும்.
இது கொஞ்சமாகப் பெய்யும் மழையை அளந்து பார்க்க உதவும். பாட்டில் நிரம்பி வழியும் அளவுக்கு மழை பெய்தால் என்ன செய்வது என்று கேட்டால்? வானிலை ஆராய்ச்சி மையம் சொல்வதை, செய்திகளில் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியதுதான்.
நாம் எப்படி மழையை அளந்து பார்க்கலாம்?
ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த பாட்டிலின் அடிப்பாக விட்டம் என்ன அளவு என்று பாருங்கள். அதே அளவு விட்டத்தை வாயாகக் கொண்ட புனல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். புனலை பாட்டிலின் மேலே பொருத்தி வைக்க வேண்டும்.
இதை வெட்டவெளியான ஓரிடத்தில் பெய்யும் மழை நீர் தடை இல்லாமல் விழும்படியாக வைக்க வேண்டும். உங்கள் வீட்டு மொட்டை மாடி வசதியாக இருக்கலாம். மழை பெய்யும்போது மழைமானி அசையக்கூடாது. கீழே விழுந்துவிடக்கூடாது. அப்படி வைக்க வேண்டும்.
24 மணிநேர கால அளவு வரை மழை நீர் மழைமானியில் விழும்படி இருக்கட்டும். அதன் பிறகு, அடிக்குச்சியால் மழைமானியில் விழுந்த நீரின் அளவை அளக்கவும். எத்தனை மில்லி மீட்டர் இருக்கிறதோ அதுவே அந்தப் பகுதியில் பெய்த மழையின் அளவு ஆகும்.