தென்மேற்குப் பருவமழை : 3 மாநிலங்களுக்கு "ரெட்" அலெர்ட்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
Red Alert Meteorological Department Warns 3 States in India For Heavy Rain
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால் 3 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் "ரெட்" அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கீழ்நோக்கி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் இந்த வாரம் நிலைபெறும் என்று தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மேற்கண்ட 4 மாநிலங்களிலும் கனமழை அல்லது இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. எனவே வானிலை ஆய்வு மையம் இந்த மாநிலங்களுக்கு "ரெட்" அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி கேரளாவில் உள்ள மலப்புரம், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்டும், திருச்சூர், பாலக்கோடு, கோழிக்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்டும் விடுக்கப் பட்டுள்ளது. மேலும் அடுத்து வரும் சில நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் 20 செ. மீ வரை மழை பொழியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா, கோலாப்பூர், சிந்துதுர்க் மற்றும் ரத்தினகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப் பட்டுள்ளது. அங்கு மேலும் சில நாட்களுக்கு இந்த நிலை தொடரும் என்று தெரிகிறது.
இதுகுறித்து இந்திய வானிலை மைய அதிகாரி நரேஷ் குமார் தெரிவிக்கையில், "தென்மேற்குப் பருவமழையானது கீழ்நோக்கி நகர்ந்து வருகிறது. கர்நாடகா, கேரளா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் 20 செ. மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பிருப்பதால், அந்த மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Red Alert Meteorological Department Warns 3 States in India For Heavy Rain