நெட்டிசன்களே கவனம்: சாதி ரீதியாக மோதலை உண்டாக்கும் பதிவுகள்! எச்சரிக்கை விடுத்த காவல்துறை!
Nellai Police Warn
நெல்லை மாவட்டத்தில் இரு பிரிவினருக்கிடையே பிரச்சனையை உருவாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் காணொளிகள் மற்றும் கருத்துக்களைப் பதிவு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான தகவல்களைச் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், சிலர் சாதிப் பெயரைச் சொல்லி வீடியோக்களை பதிவேற்றம் செய்வதால் பொதுமக்களின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் இத்தகைய செயல்கள் நடக்கின்றன.
இதுதொடர்பாக நெல்லை தாலுகா காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் அனைத்து விதமான சமூக வலைத்தளங்களையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
மக்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வீடியோக்களைப் பதிவேற்றம் செய்தால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.