தமிழகத்தில் மஞ்சள் எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா?
yellow alert to tamilnadu districts
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை குறைந்து, வெயில் வாட்டி வதைத்தது. இருப்பினும், கடந்த 2 நாட்களாக சில இடங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
இந்த நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை முதல் தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது, நாளை தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.
இதேபோல், நாளை மறுதினம் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக வருகிற 2-ந்தேதி (புதன்கிழமை) வரை மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
yellow alert to tamilnadu districts