பாகிஸ்தானில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு!
A powerful explosion in Pakistan
தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணம் பலுசிஸ்தான். இங்கு தனிநாடு கோரி ஆயுதம் ஏந்திய அமைப்பினர் சிலர் நீண்ட காலமாகவே போராடி வருகின்றனர். பலுசிஸ்தானில் உள்ள இயற்கை வளங்களை சீன மற்றும் பாகிஸ்தான் அரசுகள் சுரண்டுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த 2022-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு அந்நாட்டு அரசுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினரின் நிலைகளை குறித்து அங்கு பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று பலுசிஸ்தானில் உள்ள பிஷின் மாவட்டத்தில் சுர்காப் சவுக் என்ற பகுதியில் அமைந்திருக்கும் மார்க்கெட் பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில், இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு பெண்மணி உயிரிழந்தார். மேலும் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
A powerful explosion in Pakistan