அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை திருடிய சீன ஹேக்கர்கள்; அமெரிக்கா குற்றஞ்சாட்டு, மறுக்கும் சீனா..!
Chinese hackers stole classified US documents
அமெரிக்க அரசன் ரகசிய ஆவணங்களைச் சீன ஹேக்கர்கள் ஹேக் செய்து இருப்பதாக அமெரிக்கக் கருவூலத் துறை புகாரளித்துள்ளது.
சீன அரசின் ஆதரவில் இயங்கும் ஹேக்கர்கள் என்றும் சில முக்கிய ஆவணங்களை அவர்கள் ஹேக் செய்து அணுகியிருப்பதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
உலகின் பெரும்பாலான நாடுகள் சைபர் முறையில் தங்கள் போட்டி நாடுகளைக் கண்காணித்தே வருகிறது. சீனா மீது அமெரிக்க அரசு சில பரபரப்பு புகார்களை தற்போது முன்வைத்திருக்கிறது.
அதாவது , சீன அரசின் சப்போர்ட்டில் இயங்கும் ஹேக்கர்கள் சிலர் அமெரிக்கக் கருவூலத் துறையின் கணினிகளை ஹேக் செய்து சில முக்கிய தகவல்களைத் திருடியிருப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறது. இதை மிகவும் மோசமானசம்பவம் என்று அமெரிக்கா குறிப்பிடுகிறது.
அமெரிக்கக் கருவூலத் துறைக்கு சைபர் செக்யூரிட்டி வழங்கி வந்த பியோண்ட் டிரஸ்ட் என்ற நிறுவனத்தையே சீன ஹேக்கர்கள் ஹேக் செய்து சில ரகசியத் தகவல்களை பெற்றுள்ளதாக கூறுகிறது.
இது தொடர்பாக அமெரிக்க கருவூலத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கருவூலத் துறை ஊழியர்களுக்கு உதவ சில கிளவுட் அடிப்படையிலான சேவை பயன்படுத்தப்பட்டு வந்தது. அதைச் சீன ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர். அதில் கிடைத்த கீயை வைத்து கருவூலத் துறையின் சில முக்கிய ஆவணங்களை ஹேக் செய்து எடுத்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த ஹேக் தொடர்பாக பியாண்ட் டிரஸ்ட் நிறுவனத்தை எச்சரித்தோம். இந்த ஹேக்கிங் முயற்சியில் என்ன தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்பது குறித்து மதிப்பிட அமெரிக்க சைபர் செக்யூரிட்டி மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் செக்யூரிட்டி ஏஜென்சி மற்றும் எஃப்.பி.ஐ அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. "எந்தவொரு அடிப்படை உண்மை இல்லாமல் சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் இதுபோல அவதூறுகளைப் பரப்பக்கூடாது. இதைச் சீனா கடுமையாக எதிர்க்கிறது" என்று வாஷிங்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
English Summary
Chinese hackers stole classified US documents