பில்லி-சூனியம், அமைச்சர்கள் கைது! மூடநம்பிக்கையில் மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ்!
Malathivu minister arrested some info
மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ்ஸுக்கு சூனியம் வைத்ததாக மாலத்தீவு அரசியல் வட்டாரத்தில் மிகவும் முக்கியமான இரண்டு அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதையெடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாலத்தீவில், ஃபாத்திமா ஷம்நாஸ் அலி சலீம் என்பவர் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவரின் முன்னாள் கணவர் ஆதம் ரமீஸ் அதிபர் அலுவலக விவகாரத் துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
மாலேவின் மேயராக முகமது மூயிஸ் பதவி வகித்தபோது, ஃபாத்திமா உடன் பணியாற்றிய நிலையில், முகமது மூயிஸ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தலில் வெற்றி பெற்று மாலத்தீவு அதிபரானார். அப்போது தான் ஃபாத்திமா சுற்றுச்சூழல் அமைச்சராக பதவியேற்றார்.
இதனை தொடர்ந்து, ஃபாத்திமாவின் முன்னாள் கணவர் ஆதம் ரமீஸ், முகமது மூயிஸ்-க்கு நெருங்கிய உதவியாளராக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 5 மாதங்களாக முகமது பங்கேற்ற பொது நிகழ்ச்சிகளில் ஆதம் ரமீஸ் கலந்து கொள்ளவில்லை.
இதற்கிடையே அதிபர் அலுவலகத்தில் பில்லி-சூனியம் தொடர்பான சில நடவடிக்கைகள் காணப்பட்டுள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ஃபாத்திமா ஷம்நாஸ் அலி சலீம் மற்றும் அவரது முன்னாள் கணவர் ஆதம் ரமீஸ் ஆலியுடன் சேர்த்து மேலும் இரண்டு பேர் மீது அதிபருக்கு சூனியம் வைத்ததாகக் குற்றம் சாற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து, இவர்கள் நான்கு பேரும் கடந்த 23-ம் தேதி மாலத்தீவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அதிபர் அலுவலகத்தில் சூனியம் வைக்கப்பட்டது, எந்த தடயங்களை கொண்டு நிரூபிக்கப்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.
பில்லி-சூனியம் வைத்ததாக இரு அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது, அதிபர் முகமது மூட நம்பிக்கையில் ஊறிப்போய் உள்ளார் என்பதை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
English Summary
Malathivu minister arrested some info