உலகின் வலிமைமிக்க அணுசக்தியை கொண்டிருப்பதே நாட்டின் இலக்கு - வடகொரியா அதிபர்
North Korea aims to have world strongest nuclear forces
ஐ.நா மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. இதையடுத்து வடகொரியா விரைவில் 7-வது அணு குண்டு சோதனையை நடத்த தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன், உலகின் மிகவும் வலிமைமிக்க அணுசக்தியைக் கொண்டிருப்பதே தனது நாட்டின் இறுதி இலக்கு என்று தெரிவித்துள்ளார். நேற்று 'ஹவாசோங்-17' என்கிற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஆய்வு செய்த பின்பு ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார்.
மேலும் இந்த சந்திப்பின்போது கிம் ஜாங் உன்னின் மகள் உடன் இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் கிம் தனது மகளை முதல் முறையாக வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ராணுவ வீரர்களுடனான முக்கிய சந்திப்புக்கு கிம் தனது மகளை அழைத்து வந்துள்ளார்.
அப்பொழுது ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய கிம், உலகின் மிகவும் வலிமை மிக்க அணு சக்தியைக் கொண்டிருப்பதே வடகொரியாவின் இறுதி இலக்கு. அது இந்த நூற்றாண்டின் முன்னோடியில்லாத முழுமையான அணுசக்தியாக இருக்கும்.
மேலும் ஹவாசோங்-17 ஏவுகணை உலகின் வலிமையான ஆயுதம் என்றும் இது வட கொரியாவின் உறுதியையும், உலகின் வலிமையான ராணுவத்தை உருவாக்குவதற்கான திறனையும் நிரூபித்தது என்று தெரிவித்துள்ளார்.
English Summary
North Korea aims to have world strongest nuclear forces