பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம்; அமெரிக்காவில் இந்திய வம்சாவளி எம்.பி., சுஹாஸ் சுப்ரமணியம்..!
Oath on Bhagavad Gita Indian origin MP in America Suhas Subramaniam
அமெரிக்காவில் காங்கிரஸ் உறுப்பினராக தேர்வாகியுள்ள இந்திய வம்சாவளியான சுஹாஸ் சுப்ரமணியம் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர். புனித இந்து நூலான பகவத் கீதையின் மீது பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
வர்ஜீனியாவின் 13வது மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சுப்ரமணியம், அமெரிக்க கிழக்கு கடற்கரையிலிருந்து காங்கிரசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி ஆவார்.
அத்துடன், உலகின் மிகவும் சக்தி வாய்ந்த அரசியல் அமைப்புகளில் ஒன்றான அமெரிக்க காங்கிரஸில் உறுப்பினராக தனது மகன் சத்தியப்பிரமாணம் செய்வதைக் கண்ட அவரது தாய் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
மேலும், அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஹிந்து அமெரிக்கரான துளசி கபார்ட்டை தொடர்ந்து, சுப்ரமணியம் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு 02வது நபராக தேர்வாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவரது முன்னோடியாக இருந்த கபார்ட், 2013ம் ஆண்டு கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்து, காங்கிரஸின் முதல் உறுப்பினராக இருந்தார் என்பதும் சுட்டிக்காட்ட தக்கது.
பகவத் கீதையின் மீது உறுதிமொழி எடுப்பது என்பது அமெரிக்காவில் உள்ள அரசியலில் ஹிந்து- அமெரிக்கர்களின் செல்வாக்கு அதிகரித்து வருவதற்கான அடையாளம் திகழ்கிறது.
மேலும், காங்கிரஸில் தற்போதைய பதவிக்கு முன், சுப்ரமணியம் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகத்தில் கொள்கை ஆலோசகராக பணிபுரிந்தவர். அத்துடன், 2019-இல் வர்ஜீனியாவின் பொதுச் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பொருளாதார மேம்பாடு மற்றும் பொது சுகாதாரம் போன்ற பல்வேறு பிரச்னைகளைக் கையாண்டுள்ளார்.
பதவியேற்பு விழா குறித்து சுப்ரமணியம் கூறுகையில்,
'என் அம்மா இந்தியாவில் இருந்து டல்லெஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது அவரது மகன் வர்ஜீனியாவை காங்கிரஸில் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று நீங்கள் கூறியிருந்தால், அவர் உங்களை நம்பியிருக்க மாட்டார்.
எனது வெற்றி, தெற்காசிய மக்களுக்கும், அமெரிக்க அரசியலில் உள்ள பல இந்திய பிரதிநிதிகளுக்கும் குறிப்பிடத்தக்க சாதனை' என்று குறிப்பிட்டுள்ளார்.
சுப்ரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, காங்கிரஸில் உள்ள இந்திய வம்சாவளியினரின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இப்போது நான்காக உயர்ந்துள்ளது. அத்துடன் இந்திய- அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களில் ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா மற்றும் ஸ்ரீ தானேதர் ஆகியோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Oath on Bhagavad Gita Indian origin MP in America Suhas Subramaniam