மாஸ்கோவை நோக்கி முன்னேறும் வாக்னர் படை மீது ரஷ்யா தாக்குதல்..!!
Russia attacks on Wagner Force advancing towards Moscow
ரஷ்ய அரசின் கீழ் செயல்பட்டு வந்த வாக்னர் என்ற தனியார் ராணுவ குழு அரசுக்கு எதிராக திரும்பி உள்ளது. தற்பொழுது வாக்னர் படை தலைநகர் மாஸ்கோவை நோக்கி முன்னேறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ரஷ்ய ராணுவம் வாக்னர் படையினர் மீது குண்டு மழை பொழிந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலில் வாக்னர் படையும் ரஷ்ய படையுடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டு வந்தது. ஆனால் தற்பொழுது ரஷ்யாவிற்கு எதிராக அவர்கள் திரும்பி உள்ளனர்.
மிகப்பெரிய ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தும் இவர்கள் பணம் பெற்று தாக்குதல் நடத்தும் கூலிப்படையாகவும் செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் இந்தக் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரகோஷ் "ரஷ்ய அரசு தங்கள் மீது அடக்கு முறையை செயல்படுத்தி வருகிறது" என குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் ரஷ்யப் போரின் போது தங்களுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கவில்லை எனவும், இதனால் ரஷ்யாவுக்கு எதிராக சண்டையிட்டு சாவுவதற்கும் தயாராக உள்ளதால் நிச்சயம் ரஷ்யாவை வீழ்த்துவோம். எனவே ரஷ்ய மக்களும் தங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில் வாக்னர் குழு ரோஸ்டாவ் ஆன் டான் நகரில் உள்ள ரஷ்ய இராணுவ தலைமையகத்தை கைப்பற்றி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அக்குழுவின் தலைவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது படைகள் விமான உட்பட ராணுவ நிலைகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்த நகரில் சுமார் பத்து லட்சம் பேர் வசித்து வரும் நிலையில் மக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்நகர நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வாக்னர் குழு தலைவரை கைது செய்ய உத்தரவிட்ட ரஷ்ய அதிபர் புதின் வாக்னர் குழுவினரை கண்டதும் சுடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தற்பொழுது வாக்னர் குழுவினர் மாஸ்கோவை நோக்கி முன்னேற தொடங்கியுள்ளதாக ரஷ்ய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் தங்கள் பாதையில் குறுக்கிட வேண்டாம் என ரஷ்ய ராணுவத்தினரை அக்குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இருப்பினும் வாக்னர் குழுவினர் மீது ரஷ்ய ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது என சர்வதேச செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
English Summary
Russia attacks on Wagner Force advancing towards Moscow