அத்துமீறும் ஊடகங்கள்.! கொந்தளிக்கும் பாரதிராஜா - காரணம் என்ன?
barathi raja published report about medias
அத்துமீறும் ஊடகங்கள்.! கொந்தளிக்கும் பாரதிராஜா - காரணம் என்ன?
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா, கடந்த செவ்வாய்கிழமை தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை யூடியூப் முதல் அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் வீடியோ எடுத்தன. இந்த நிலையில் மூத்த இயக்குனரும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "மரணம் கொடுமையானது. அதிலும் அகால மரணங்கள் மிகக் கொடுமையானது. அப்படி ஒரு நிகழ்வை சந்திக்கும் போது சொந்த பந்தங்கள், உடன் நட்புகள் கலங்கி போகும். செய்வதறியாது திகைத்துப் போகும். அந்நேரம் ஆறுதல் சொல்லுதல் இயலாத காரியம். பேசுவதற்கு வார்த்தைகள் இருக்காது. உடன் நிற்பது மட்டுமே சாத்தியமாகும்.
அந்நேரத்தை கூட நம்மால் தர முடியாத நிலைக்கு தள்ளி விடுகின்றன சமீபகால மீடியாக்களின் செயல். புகழ் பெற்றவர்களின் வீட்டு இழப்பை இவர்கள் படம் எடுத்துப் போடுவதால் தேவையற்ற கூட்டம் சேருகிறது.
வந்து உடனிற்க நினைக்கும் பலரை துக்க வீட்டிற்கே வரவிடாமல் செய்து விடுகிறது அல்லது வந்ததும் ஓட வைத்து விடுகிறது. முன்பெல்லாம் ஊடக தர்மம் இருந்தது. எந்நிகழ்வை படமாக்க வேண்டும், கூடாது என்று.
இப்போது சமூக வலைதளங்கள் பெருகிய பின் எல்லாமே மாறிவிட்டது. அறநிலைப் பிறழ்ந்து விட்டது. ஊடகங்கள் மரண வீட்டின் உள்ளே வரை நுழைந்து காட்சி திருடுவதை செய்கின்றன. நம் அனுமதி இல்லாமல் இரக்கமற்ற நம் கையறு நிலையில் நிற்கும் முகங்களை படம்பிடித்து காட்டுகின்றனர். இது எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை.
சினிமாக்காரர்களின் வீடு என்ன திறந்த மடமா? அவர்களின் துக்கம் கேலி சித்திரமா? நேற்றும் இதற்கு முன் நிகழ்ந்த மரண நிகழ்விலும் மீடியாக்கள் நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. மீடியாக்கள் போர்வையில் வருபவர்களையும் அடையாளம் கண்டு களைய வேண்டிய நேரம் இது" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
barathi raja published report about medias