கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு - நீதி கேட்டு குரல் எழுப்பும் பாலிவுட் பிரபலங்கள்
Kolkata woman doctor murder case Bollywood celebrities raise voice for justice
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெண் மருத்துவர், கல்லூரி கருத்தரங்கு அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பெண் மருத்துவர் கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதன்படி பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இப்போது நீதி என்பது இத்தகைய அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான். அதற்கான ஒரே வழி மிகவும் கடுமையான தண்டனை மட்டுமே என்றும், அந்த தண்டனை இதுபோன்ற குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
நடிகை ஆலியா பட் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், நிர்பயா துயர சம்பவம் நடந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் பெரிதாக எதுவும் மாறவில்லை என்பதை நினைவூட்டும் வகையில் மற்றொரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
இதே போல் நடிகை கரினா கபூர் வெளியிடுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே நிகழ்வு, அதே போராட்டம். ஆனால், இன்றுவரை நாம் மாற்றத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
மேலும் நடிகை பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைதள பக்கத்தில், இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு போராட்டத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், அந்த பெண்ணுக்காக நீங்கள் பேசாவிட்டால் வேறு யார் பேசுவார் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
English Summary
Kolkata woman doctor murder case Bollywood celebrities raise voice for justice