நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்.!
MK Stalin condolences to actor mayilsamy
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான மயில்சாமி இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நாயகனாக நடித்துள்ளார். 1985-ம் வருடம் வெளியாகிய கன்னிராசி திரைப்படம் தான் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அவர் அறிமுகமான படமாகும்.
சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த நடிகர் மயில்சாமி பலகுரல் மன்னனாக திகழ்ந்தவர். இவர் திரைப்பட தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2021 - ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக வேட்பாளராக போட்டியிட்டவர் நடிகர் மயில்சாமி.
அத்துடன் பெருந்தொற்று கொரோனாவால் பலரும் அவதிப்பட்ட காலத்தில் அவர்களுக்கு பல உதவிகளை செய்து கொடுத்தவர் தான் நடிகர் மயில்சாமி. இந்த நிலையில், அவருக்கு தற்போது 57 வயதாகும் நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு கேளம்பாக்கம் சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியவருக்கு மாரடைப்பு ஏற்ப்பட்ட நிலையில், தான் அவர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரது இறப்பு செய்தியை அவரது மகன் உறுதிபடுத்தியுள்ளார்.
இவரது மறைவையொட்டி திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அந்த இரங்கல் செய்தியில் 'பிரபல நகைச்சுவை நடிகர் திரு.மயில்சாமி அவர்கள் மறைந்தார் என்ற துயர்மிகு செய்தியறிந்து வருந்தினேன். பல குரல்களில் ஒலிநாடகங்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர். 'காமெடி டைம்' நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் இல்லங்களில் ஒருவராகவே பார்க்கப்படுகிற அளவுக்கு அன்பைப் பெற்றவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பாராட்டைப் பெற்றவர். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தன்னுடைய கருத்துக்களை ஆழமாக பதிவு செய்யக் கூடியவர். திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த அவரது இறப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
English Summary
MK Stalin condolences to actor mayilsamy