ஓரே நாளில் இரு அரசுப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு: ஒத்திவைக்க வேண்டும் - டாக்டர் இராமதாஸ்!
PMK Dr Ramadoss Say About TNPSC exam
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஜூலை 26-ஆம் தேதி அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான ( நேர்முகத்தேர்வு இல்லாதது) போட்டித் தேர்வுகள் வரும் 14-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதில் சிவில் பொறியியல் பாடத்திற்கான தேர்வு நடைபெறும் அக்டோபர் 21-ஆம் தேதியே, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு 2566 பொறியியல் சார்ந்த பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
இரு தேர்வுகளும் ஒரே கல்வித்தகுதியைக் கொண்டவை என்பதால் நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டவர்களால் எழுத்துத் தேர்வில் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
பொறியியலை அடிப்படையாகக் கொண்ட ஒரே மாதிரியான பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அண்ணா பல்கலைக்கழகம் என இரு அமைப்புகள் ஆள்தேர்வு நடத்துவது தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் ஆகும்.
தமிழ்நாட்டிலுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பொறியியல் பணிகளுக்கு தகுதியானவர்களை இது வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தான் தேர்ந்தெடுத்து வந்தது.
ஆனால், இப்போது அந்தப் பணிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வாயிலாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நேரடி ஆள்தேர்வு நடத்துவதால் ஒரே மாதிரியான பணிகளுக்கு இரு வகையான தேர்வுகளை தேர்வர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இது தேவையற்றது என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்காக அண்ணா பல்கலைக்கழகம் தேர்ந்தெடுக்கும் பணிகள் அனைத்தும் ஊதிய நிலை 20, 13, 11, 5 ஆகியவற்றில் அடங்கியவையாகும்.
இந்த வகை பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேர்முகத் தேர்வு நடத்தாமல், எழுத்துத் தேர்வின் அடிப்படையில் மட்டும் தேர்ந்தெடுக்கும் நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மட்டும் நேர்முகத் தேர்வையும் நடத்துவது தேவையற்ற முறைகேடுகளுக்குத் தான் வழிவகுக்கும் என்ற அச்சம் தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிகளுக்கு நேர்முகத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாவிட்டால் வரும் 21-ஆம் தேதி நடத்தப்படவுள்ள நேர்முகத் தேர்வை மட்டும் வேறு ஒரு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் இத்தகைய குழப்பங்கள் ஏற்படுவதைத் தடுக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பொறியியல் பணிகளுக்கும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே ஆள்தேர்வு நடத்த வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Dr Ramadoss Say About TNPSC exam