நடப்பாண்டு முதல் பொறியியலில் தமிழ் பாடங்கள்... அமைச்சர் பொன்முடி அறிவிப்பு...!!
Ponmudi announced tamil subjects in engineering from this year
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழ் பண்பாடு மற்றும் தமிழும் தொழில்நுட்பமும் என்ற பாடங்கள் சேர்ப்பதற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் "தமிழகத்தில் தற்பொழுது தமிழ் பாடமே படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் பாடம் படிக்க முடியவில்லை.
இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டும் என கருதிய தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்திற்கான ஒரு கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு கல்விக் குழுவை ஏற்படுத்தினார். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடம் இல்லை. அதன் காரணமாக நடப்பு கல்வி ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளிலும் தமிழ் பண்பாடு மற்றும் தமிழும் தொழில்நுட்பமும் என்ற இரு பாடங்களை சேர்க்க வேண்டுமென முதல் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
அதற்கான பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பேராசிரியர் பணி நியமனம் தற்பொழுது நடைபெற்று வருகிறது. தமிழுக்கு அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தமிழை முழுமையாக படிக்க அனைவரும் முன்வர வேண்டும்" என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்
English Summary
Ponmudi announced tamil subjects in engineering from this year