மிசோரம்: கல்குவாரி விபத்தில் உயிரிழந்த 11 தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு.!
11 workers killed in Mizoram stone quarry accident
மிசோரமில் கல்குவாரி விபத்தில் சிக்கி உயிரிழந்த 11 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
தெற்கு மிசோரமின் ஹனாதியால் மாவட்டத்தில் மவ்தார் பகுதியில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த குவாரியில் 13 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, திடீரென குவாரியில் கற்கள் சரிந்து விழுந்துள்ளன.
இதில் ஒரு தொழிலாளி தப்பி ஓடிய நிலையில், 12 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எல்லை பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இவர்களுடன்,நேற்று காலை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு, விபத்தில் சிக்கி உயிரிழந்த 8 தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர். இருப்பினும் காணாமல் போன மற்ற 4 தொழிலாளர்களை தேடும் பணி தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து மீதமுள்ள ஒரு தொழிலாளியை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது என்று கூடுதல் துணை ஆணையாளர் சாய்ஜிக்புய் தெரிவித்துள்ளார். மேலும் அசாம் ரைபிள் படை, மாநில போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை தேடுதல் குழுவினருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
English Summary
11 workers killed in Mizoram stone quarry accident