கேரளாவுக்கு மீண்டும் ஆபத்து.! நிபா வைரஸால் இருவர் பலி.! மாநிலம் முழுவதும் உஷார் நிலை!
2 person died due to Nipah virus in Kerala
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இயற்கைக்கு மாறான காய்ச்சலால் உயிரிழந்த இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கேரள சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நிபா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு புனேவில் உள்ள ஐ.சி.எம்.ஆர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜிக்கு இறந்தவர்களின் இரத்த மாதிரிகளை அனுப்பி சோதனைக்குப் பிறகு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதன் முதலில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அப்போது நிபா வைரசால் பாதிக்கப்பட்ட சுமார் 17 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து வைரஸை கட்டுப்படுத்த கேரள அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி மர்ம காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று உயிரிழந்த இருவருக்கு நிபா வைரஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கேரள சுகாதார அமைச்சர் வீணா கூறுகையில் "நிவா வைரஸால் பாதிக்கப்பட்ட 49 வயதான இறந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் அந்த நபரின் ஒன்பது வயது மகன், பத்து மாத குழந்தை மற்றும் வயதான உறவினர் ஒருவரும் அடங்குவர். குழந்தைகளுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் ஆபத்தான நிலையில் உள்ளது. இறந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டுள்ளனர்" என சுகாதாரத் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் கேரள மாநிலம் முழுவதும் நிபா வைரஸ் தொற்று பரவாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக கோழிக்கோடு மாவட்டம் முழுவதும் உஷார் நிலையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
2 person died due to Nipah virus in Kerala